வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:399)

இலக்கியப் பொழில் - அமைப்பு

அன்புடையீர், வணக்கம்.

          'வாழ்வியல் இலக்கியப் பொழில்’ என்னும் தமிழமைப்பு சிங்கப்பூரில் கடந்த 11-11-2017 முதல், மாதாந்திர நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது.

          வாழ்வியல் இலக்கியப் பொழில் சிங்கப்பூரில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோருக்காக ஒரிரு வரிகள். மாதாந்நிர நிகழ்வாக தமிழர்கள் கூடி, அதுவும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளோர், அதிலும் சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளை இக்கால மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சேர்ந்தே படைப்பர்; சேர்ந்தே கற்பர். தமிழார்வலர்கள், கவிஞர்கள், புலவர்கள், முனைவர்கள் என பல்வேறு தரப்பினர் தமிழ்த்துறை சார்ந்தோர் மற்றும் தமிழ்த்துறை சாராதோர் என பலர் சங்கமிக்கும் ஓர் அழகியப் பொழில் !

          'வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் முக்கிய நோக்கங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியும் மற்றும் திட்டங்கள் பற்றியும் விளக்குவதில் பெருமைகொள்கிறது.

நோக்கங்கள்:

           ➤ தமிழ் இலக்கியம் கூறும் வாழ்வியல் முறைகளை இளையோர்களிடம் சேர்த்தல்.
           ➤ தமிழ் இலக்கியங்களை தினந்தோறும் வாசிக்க வழிவகை செய்தல்.
           ➤ குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே தமிழ் இலக்கியங்கள் கற்று அவற்றின் மதிப்பியல்புகளை கண்டறிந்து செயல்பட வைத்தல்; அதன் மீதான ஆர்வத்தையும் வேகத்தையும் கூட்டுதல்.
           ➤ பெற்றோர்களும் இளையோர்களும் இணைந்தே மேடைகளில் பங்கேற்க வழிவகை செய்து பாலமாக செயல்படுதல்.
           ➤ ஒத்த கருத்துகளையும் இலக்குகளையும் நோக்கமாக கொண்ட மற்ற தமிழ் அமைப்புகளுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
           ➤ இலக்கிய கட்டுரைகள் எழுத ஊக்குவித்தல், மாணவர்கள் வரைதல் மற்றும் இதர ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்டு உருவாக்கும் பலவித படைப்புகளை பத்திரிக்கைகளில் வெளியிட வழிவகை செய்தல்.
           ➤ அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில், தமிழ் இலக்கியத்தின் கருத்துகளை எழுதுதல், ஓதுதல் போன்ற போட்டிகள் மூலம் சிங்கப்பூர் அளவில் நடத்தி தமிழ்ச்சேவைகளை விரிவுபடுத்துதல்.
          

செய்முறைகள்:

           ➤ சங்க இலக்கிய நூல்களை படிப்படியாக மாணவர்களே முறையாக படிக்க செய்தல்.
           ➤ ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்த நூல்கள் கூறும் நல்ல வழிகளை விளக்கி கூறுதல்.
           ➤ சங்க இலக்கிய நூல்களின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து மாணவர்களை மேடையில் நடிக்க வைத்தல். பின்பு அந்த கதையின் கருத்தை கேட்டு அறியச் செய்தல்..
           ➤ தமிழ் ஆசிரியப் பெருமக்களையும் மாணவர்களையும் நிகழ்வில் கலந்துரையாட வைத்தல்.

திட்டங்களும் செயற்பாடுகளும்:

           ➤ மாதந்தோறும் 2ஆவது சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நிகழ்வு.
           ➤ இ-பொழில் காலாண்டிதழ் நடத்தி படைப்புகளை விரிவாக்குதல்.

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" பெயர் விளக்கம்.

           ஒரு குழந்தை பெற்றெடுத்தவுடன் பெயர் சூட்டுவதில் ஒரு சிறப்புண்டு. சிலர் அதனை பெரிய அளவில் விழாவாகவும் நடத்துவர். அவ்வகையில் வாழ்வியல் இலக்கியப் பொழில் பெயர் வைக்கும்போது மன்றம், சோலை, சங்கம், கழகம் என பல்வேறு பெயர்களை மனக்கண்முன் நிறுத்தி பின்னர் பொதும்பர், பொழில் என்னும் சிறப்பு பெயர்களை தேர்ந்தெடுத்து, தமிழ்ச் சான்றோர்கள் பலரோடு கலந்துரையாடி சங்க இலக்கியக் கருத்துகளை விவாதிக்க இருக்கும் ஒரு தமிழ் அமைப்பிற்கு சிறந்தவொரு பெயராக அமைய வேண்டும் என்பதால் நன்காராய்ந்த பின்னரே 'வாழ்வியல் இலக்கியப் பொழில்' என்று பெயர் சூட்டப்பட்டது.
           சுருக்கமாக கூறவேண்டுமானால் "பொழில்" என்றால் மழைக்காடு, அடர்காடு, சோலை மற்றும் பூங்கா ஆகும். இலக்கியக் கருத்துகளைப் பற்றி கலைந்துரையாடி கலைந்து செல்லும்போது மனம் நிறைவாகவும், மனம் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டியே இத்தகைய பொருத்தமான பெயரிட்டோம் என்பதை விளக்கிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பொழில் என்றச் சொல் தமிழ் இலக்கிய நூல்களில் எங்கெங்கெல்லாம் வருகின்றன என்பதைப் பற்றி அறிவோம்.

பொழில் என்பது:

           ➤ Greatness, Largeness – பெருமை (பிங்கல நிகண்டு)
                     3897 வரி - புவியுஞ் சோலையும் பெருமையும் பொழிலே (867).

           ➤ Park, Grove; Forest – சோலை (பிங்கல நிகண்டு)
கம்பராமாயனத்தில் காண்டம் 2.அயோத்தியா காண்டம்
படலம் 8. வனம் புகு படலம்
                     “ஆவது உள்ளதே! ஐய ! கேள், ஐயிரண்டு அமைந்த
                     காவதப் பொழிற்கு அ புறம் கழிந்தபின் காண்டி,
                     மேவு காதலின் வைகுதி, விண்ணினும் இனிதாத்
                     தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளது ஆல்.”

           ➤ Flower Garden; Pleasure-Garden – பூந்தோட்டம் (திவாகர நிகண்டு) மணிமேகலை. வரி 38.
                     அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
                     ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
                     பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்

           ➤ World – உலகம். இடம் பெற்ற நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம்
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி
(தலைமகள் தூதுவிடல்) 2819
                     நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
                     நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
                     மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண்சிறு குருகே
                     மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே

           ➤ Country, District – நாடு (சூடாமணி நிகண்டு)

           ➤ Division of a Country – நாட்டின் கூறு
இடம்பெற்ற நூல் – பெரும்பாணாற்றுப்படை – வரி 465
                     நின்னிலை தெரியா வளவை யந்நிலை
                     நாவலந் தண்பொழில் வீவிண்ரு விளங்க
                     நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
                     நாவலந் தண்பொழில் வீவிண்ரு விளங்க
                     நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
                    

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் சின்னம் பற்றிய விளக்கம்:


          சதுர வடிவிலான கட்டத்திற்குள் அமைந்த உருவத்தை சற்றுத் தொலைவில் இருந்து ஒன்றாக பார்க்கும்போது எழுதுகோலின் முள்முனையாகவும், சற்று நெருங்கி வந்து பார்த்தால் மேலே இருப்பது விரித்து வைத்த புத்தகமாகவும் கீழ்ப்புறம் எழுதுகோலின் முள்முனையாகவும் இரு பொருள்களாகத் தோன்றும். அதில் இரண்டு ஆழமான கருத்துகள் பொதிந்துள்ளன.
           1. ஆழமான கருத்துகளைக் கொண்ட எழுத்துகளை மட்டுமே புத்தகமாக்க வேண்டும்
           2. ஆழமான கருத்துகளைக் கொண்ட எழுத ஆழந்த படிப்பும் அவசியமாக இருக்க வேண்டும்.
           மூலாதார சக்கரம் முதல் உச்சந்தலை (சகஸ்ரஹாரம்) தாமரைச் சக்கரம் வரையுள்ள ஆறு சத்தி மையங்கள் போல் புத்தகம் வழி பேராற்றல் பொங்கி வரவேண்டும் என்பதே அதன் விளக்கம் ஆகும்.
          

இதுவரை, மாதாந்திர நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற அங்கங்கள்:

           சிறுவர் உரை (மேடைப்பேச்சு), குறுக்கெழுத்துப் போட்டி, மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, சங்க இலக்கிய ஓவியப் போட்டி, சிறுவர் பட்டிமன்றம், சங்க இலக்கிய நாடகம், கட்டுரைப் போட்டி, நீதிக்கதைகள், கவிதையும் கானமும், நாட்டுப்புறப் பாடல் மற்றும் ஆடல், கும்மியாட்டம், பட்டிமன்றம், சங்க இலக்கிய பாடல்-உரை, கருத்தரங்கம், நாட்டுபுறப் பாடல் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் குறுநாடகம் என பல்வேறு சுவையான அங்கங்களை அவ்வப்போது மேடையில் அரங்கேற்றி வருகிறோம்.

சிறப்பு அங்கங்கள்:

           ➤ வேரும் விழுதும் (தாய்-சேய் இணைந்து மேடையில் உரையாடுதல்)
           ➤ நாப்பிறழ் பயிற்சி
           ➤ சொல் விளையாட்டு
           ➤ இலக்கியப் புதிர்

           தொல்காப்பியம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விவேக சிந்தாமணி, நாலடியார், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள், இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி, பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, திரிகடுகம், பட்டினப்பாலை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள்.

பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பு:

           ➤ சிராங்கூன் சமூக மன்றத்தில் பொங்கல் விழாவில் பங்கெடுப்பு (ஜனவரி 2018).
           ➤ தரும முனீஸ்வரன் ஆலயத்தில் சிவராத்திரி இரவில் பல்சுவை நிகழ்ச்சி (பிப்ரவரி 2018).
           ➤ தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா (ஏப்ரல் 2019).

           ➤பொங்கோல் சமூக மன்றத்தில் "தீபாவளி கொண்டாட்டம்" நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் 200 ஆண்டுகால வரலாற்று நாடகம். (நவம்பர் 2019)
           ➤பொங்கோல் சமூக மன்றத்தில் "பொங்கல் திருவிழா" நிகழ்ச்சியில், கிராமிய கலைகளுடன் நடனம். (ஜனவரி 2020)

           ‘இளையோருக்கும் பெரியோருக்குமான இணைப்புப் பாலம்’ என்ற கோட்பாட்டில் சிறுவர்கள் அவர்தம் பெற்றோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர். தமிழ்ச் சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றறிய ஒரு சிறந்த களமாக சிங்கையில் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. நிகழ்ச்சியில் மேலும் பல அங்கங்களைச் சேர்த்து நிகழ்ச்சிகளைச் செம்மையாக செய்துவரும் செயலவைக் குழுவிற்கும் தகவல் தொழில்நுட்ப பங்களிப்பு தரும் அனைவருக்கும் மனம்நிறைந்த நன்றி. மாதாந்திர நிகழ்ச்சிக்கு தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
தலைவர்,
வாழ்வியல் இலக்கியப் பொழில்,
சிங்கப்பூர்

தமிழ் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சந்திப்பு - ஜனவரி 2024
அடுத்த நிகழ்வு (75ஆவது சந்திப்பு):
நாள்: 13-01-2024
நேரம்: பகல் 5.00 மணிக்கு
இடம்: பொங்கோல் சமூக மன்றம்


<
1 / 10
2 / 10
3/ 10
4 / 10
5/ 10
6/ 10
7/ 10
8 / 10
9/ 10
10/ 10

மூதுரை

வெண்பா :6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.